Skip to main content

பிரபல கிரிக்கெட் வீரர் பெயரில் தொடங்கப்பட்ட கிரிக்கெட் அகாதெமி... மகிழ்ச்சியில் ரசிகர்கள்...

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சிஎஸ்கே அணியின் இந்நாள் கேப்டனுமான எம்.எஸ் தோனி பெயரில் பெங்களூரில் கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி 90 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும், 350 ஒரு நாள் போட்டிகளிலும், 98 டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இவர் தலைமையில் இந்திய அணி டி20 உலகக்கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை, சேம்பியன் டிராபி என மூன்று கோப்பைகளை வென்றுள்ளது. எம்.எஸ் தோனி தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக உள்ளார். 

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் ஆமதாபாத்தில் எம்.எஸ் தோனி பெயரில் கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டது. இந்தநிலையில் தற்போது பெங்களூரில் எம்.எஸ் தோனி பெயரில் கிரிக்கெட் அகாதெமி தொடங்கப்பட்டுள்ளது. விளையாட்டு நிறுவனங்களான கேம்பிளே மற்றும் ஆர்கா ஸ்போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இதன் செயல்பாடுகளை நிர்வகிக்கின்றன. 
எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமி ஆலோசகரான தோனி இதுபற்றி கூறியதாவது: எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமியைத் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். சிறந்த தொழில்நுட்பத்தின் உதவியுடன் கிரிக்கெட் பயிற்சிகள் அளிக்கப்படும். தரமான பயிற்சியாளர்கள், உடற்பயிற்சி நிபுணர்கள் பயிற்சியளிப்பார்கள். கிரிக்கெட் தொழில்நுட்பம் மற்றும் இந்த விளையாட்டுக்குத் தேவையான மனநலப் பயிற்சிகளைக் கற்றுக்கொள்ள எம்.எஸ். தோனி கிரிக்கெட் அகாதெமியில் இணையுங்கள் எனக் கூறியுள்ளார்.

Comments